search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்வு தோல்வி"

    தேர்வு தோல்வி பயத்தால் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்து பிளஸ்-2 மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்து பிளஸ்-2 மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். தேர்வு தோல்வி பயம் காரணமாக அவர் இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    வேலூர் சத்துவாச்சாரி பகுதி 3-ல் உள்ள வசந்தம் நகரை சேர்ந்தவர் காந்திரூபன், பி.எஸ்.என்.எல். அதிகாரி. இவருடைய மகன் ஷாம்பிரதீப் (வயது 18). ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ்-2 படித்துவந்தார். ஆனால் சரியாக தேர்வு எழுதவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகிறது. இதனால் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்று மாணவருக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த சில நாட்களாக அவர் சோகமாக இருந்துள்ளார்.

    நேற்றுமுன்தினம் அவர் தூக்கம் இல்லாமல் இருந்துள்ளார். பின்னர் நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் இருந்து ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்திற்கு வந்துள்ளார். மேம்பாலத்தில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு கத்தியால் தனது கையில் வெட்டியிருக்கிறார்.

    பின்னர் சுமார் 30 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவருக்கு இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    உடனடியாக போலீசார் விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவர் ஷாம்பிரதீப்பை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×